கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு விமானம் மூலம் நேற்று (ஆகஸ்ட் 3) இரவு 157 இந்தியா்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அதில் 105 ஆண்கள், 40 பெண்கள், 12 சிறுவா்கள் ஆகியோர் அடங்குவர். பின்பு அவா்களைத் தகுந்த இடைவெளிவிட்டு வரிசைப்படுத்தி, மருத்துவ பரிசோதனையோடு குடியுரிமை, சுங்கச்சோதனைகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர்களில் 107 பேர் அரசின் இலவச தங்கும் இடமான சவீதா மருத்துவமனைக்கும், 47 பேர் தனியார் உணவு விடுதிகளுக்கும், 3 பேர் அரசின் சிறப்பு அனுமதி பெற்ற வீடுகளுக்கும் தனிமைப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் துபாயிலிருந்து 180 இந்தியா்களுடன் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை சென்னை வந்தது. அதில் 105 ஆண்கள் , 60 பெண்கள், 12 சிறுவா்கள், 3 குழந்தைகள் ஆகியோர் வந்தனர். பின்பு அவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் 78 பேர் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கும், 97 பேர் தனியார் உணவு விடுதிகளுக்கும், 5 பேர் அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளுக்கும் தனிமைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இலங்கையிலிருந்து 34 இந்தியா்களுடன் ஏா் இந்தியா சிறப்பு விமானம் இன்று (ஆகஸ்ட் 4) காலை சென்னை வந்தது. அதில் வந்த அனைவரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள். அந்த நிறுவனமே அவர்களை அரசின் சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் இந்தியா அழைத்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு அரசின் இலவச தங்கும் இடங்கள் கிடையாது. விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை, சுங்கச் சோதனைகள் முடிந்த பின்னர் அவர்கள் தனிப் பேருந்துகளில் சென்னை நகர உணவு விடுதிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: துபாயிலிருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்!