சென்னை: தமிழக பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை டேக் செய்து, "பெண்களுக்கான சம உரிமை, மரியாதையை வழங்காததற்காக தமிழக பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
வெளிநாட்டவர்போல, நான் ட்ரோல் செய்யப்படுவதை உணர்கிறேன். அனைத்து வீடியோக்களையும் ஆடியோக்களையும் போலீஸில் கொடுத்து புகாரளிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையான தொண்டர்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
அவர்களை விரட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துக்கள். பிரதமர் மோடி ஜி, நீங்கள் சிறப்பானவர். தேசத்தின் தந்தை. நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்.
இந்த அவசர முடிவை எடுத்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலையே. அவர் மலிவான தந்திரப் பொய்யர். அதர்மத்தின் தலைவர். எட்டு ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றிய அனைத்து பாஜக கட்சியின் காரியகர்த்தாக்களுக்கும் நன்றிகள். அவர்களுடன் நான் மிகுந்த அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன். பிறரை புண்படுத்துவது இந்து தர்மம் அல்ல.
அண்ணாமலை தலைமையில் இனி தொடர முடியாது. அவரது தலைமையில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. பெண்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்று நம்பாதீர்கள். யாரும் வரப் போவதில்லை. நீங்கள் சொந்தமாக காத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். உங்களை மட்டுமே நம்புங்கள். நீங்கள் மதிக்கப்படாத இடத்தில் ஒருபோதும் தங்காதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வருகிறது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாகக் கூறி, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் இடை நீக்கம் செய்யப்பட்டார். உண்மையைப் பேசியதால் தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள் என்றும், தான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றும், காயத்ரி ரகுராம் பதிலளித்திருந்திருந்தார். இந்த நிலையில் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பாஜகவில் துரோகிகளுக்கு இடமில்லை" - காயத்ரியை சீண்டிய அமர் பிரசாத் ரெட்டி