சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். அதேநேரம், வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழைப்பெய்து வருகிறது. இதுகுறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய பாலச்சந்திரன், "தமிழகப் பகுதிகளில் தற்போது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. மேலும் தென்னிந்தியாவை ஒட்டிய கடல் பகுதிகளில் கிழக்கில் இருந்து மேற்குத் திசையில் நகர்ந்து செல்லக்கூடிய 'ராஷ்பி வேவ்ஸ்' நகர்ந்து செல்கிறது.
மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து செல்லக்கூடிய எம்ஜேஓ நிகழ்வும் நிகழ்கிறது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடி உள்ளது. நிலப் பகுதிகளில் ஈரப்பதம் குவிவும் அதிகரித்து உள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து உள்ளது.
கடந்த ஒரு நாளில் தமிழ்நாட்டில் 60 இடங்களில் கன மழையும், 13 இடங்களில் மிக கன மழையம் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவி பகுதியில் 19 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழையினைப் பொறுத்தவரை நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்குத்தொடர்ச்சி மலையினை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகியப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழக கடற்கரை பகுதிகள், மன்னர் வளைகுடா குமரிக் கடல் பகுதிகள், மாலத்தீவு, லட்சத்தீவுப் பகுதிகளில் சூறைக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வருகிற மே 6ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகி அது 7அல்லது 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகக் கூடும். அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க : Tamil Nadu weather: தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!