கரோனா பெருந்தொற்று உச்சமடைந்துள்ள நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே வேளையில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை, தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் எடுத்து கூறியுள்ளது. அதன்படி, கரோனா சிகிச்சை மையங்களில் எண்ணிக்கையும், அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
மேலும், ரெம்டெசிவர், ஆக்ஸிஜன், ஹெப்பாரியின் மருந்துகளின் இருப்பை அதிகப்படுத்துதல், தடுப்பூசிகளின் தேவை அதிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை மாநில தலைவர் மருத்துவர் பி. ராமகிருஷ்ணன் கூறியதாவது, "ஏப்ரல் 22ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தபடி கரோனாவை எதிர்த்து பணி செய்வது மரணித்த தனியார் மருத்துவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை அதிகம் பரவும் இந்த நேரத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை முதல் முக்கிய பணியாக நாங்கள் கருதுகிறோம். இதேபோன்று கரோனா சிகிச்சை மையம் அமைக்கத் தேவையான வசதிகள் இருக்கும் மருத்துவமனைகளை 100 படுக்கைகளுக்கு மேலுள்ள மருத்துவமனைகளை கரோனா சிகிச்சை மையங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
100 படுக்கைகளுக்கு குறைவாகவுள்ள மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான போதிய வசதி உண்டெனில் கரோனா சிகிச்சை மையங்களாக எடுத்துக் கொள்ளலாம். குறைவான வசதிகள் உடைய மருத்துவமனைகளை கரோனா கண்காணிப்பு மையங்களாக மாற்றலாம். கரோனா, கரோனா அல்லாத நோய்களை ஒரே இடத்தில் கலந்து சிகிச்சை செய்யக்கூடாது" என்றார்.
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மாநில செயலாளர் மருத்துவர் எ.கே ரவிக்குமார் கூறுகையில், "கரோனா நோயாளிகளின் மென்மேலும் அதிகரிக்கும் நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் அதிக கவனம் எடுத்துக்கொண்டாலும் பொதுமக்கள், நோயாளிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் அல்லது 250 ரூபாய்க்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.