வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் மே 26ஆம் தேதி மாலை வாக்கில் வட மேற்காக நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்க மாநில கடற்கரையோரம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு 'யாஸ்' (Yaas) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயலை எதிர்கொள்வதற்காக இந்திய கடலோர காவல் படை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்குக் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையை இந்திய கடலோர காவல் படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
மேலும், இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ரிமோட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்டப் பகுதிகளில் இருக்கும் வானிலை எச்சரிக்கை செய்திகள் தொடர்ச்சியாக ஆங்கிலத்திலும், உள்ளூர் மொழிகளிலும் வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வணிகக் கப்பல்கள், மீன்பிடி படகுகள், மீன்பிடி கண்காணிப்பு குழுக்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் மற்ற பணிகளில் உள்ள கப்பல்கள் என அனைத்திற்கும் எச்சரிக்கை விடப்படுகிறது. நங்கூரமிட்டு உள்ள கப்பல்களும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துறைமுக அலுவலர்கள், எண்ணெய் நிறுவன பணியாளர்கள், கப்பல் மற்றும் அது தொடர்பான பணியாளர்கள், மீன்பிடி அலுவலர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலருக்கும் புயல் பாதிப்பு குறித்தும், அதன் நிலவரம் குறித்தும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருவதாகவும், மீட்பு மற்றும் பாதுகாப்பு படகுகள் கப்பல்கள் குறிப்பிட்டப் பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் மீன் பிடித்தலுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான டர்னியர் விமானங்கள், கப்பல்கள் மூலமாக கடலுக்குச் சென்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்திய கடலோர காவல் படையின் பேரிடர் மீட்பு படைகளும், மீட்புப் படகுகள், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகள் உடன் நேரடியாக மீட்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மருத்துவ உதவி குழுக்களும், ஆம்புலன்ஸ்களும் உடனடியாக பல்வேறு பகுதிகளுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.