சென்னை: இந்திய கடலோர காவல்படை இன்று தனது 45ஆவது எழுச்சிநாளை கொண்டாடவிருக்கிறது. 1978ஆம் ஆண்டு வெறும் ஏழு கப்பல்களை மட்டும் கொண்டிருந்த இந்திய கடலோர காவல்படை இன்று உலகின் நான்காவது பெரிய கடற்படையாக வளர்ந்துளளது.
தற்போது, இந்திய கடலோர காவல்படையில் 156 கப்பல்கள், 62 விமானங்கள் உள்ளன. இதனை, 2025ஆம் ஆண்டுக்குள் 80 விமானங்களாகவும், 200 கப்பல்களாகவும் அதிகரிக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
'நாங்கள் பாதுகாக்கிறோம்' என்கிற இலக்கோடு சேவையாற்றிவரும் இந்திய கடலோர காவல்படை, இதுவரை 10 ஆயிரம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 14,000 குற்றவாளிகளை கைதுசெய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், 50 கப்பல்கள், 12 விமானங்களின் உதவியோடு, பிரத்யேக பொருளாதார மண்டலத்தை 24x7 அடிப்படையில் கடற்படை கண்காணித்துவந்தது.
கடல்தடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த விமான கண்காணிப்பு சேவை, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பல்களைப் பாதுகாக்கவும், பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சட்டவிரோதமாக நுழைந்த மீன்பிடி படகுகளை அச்சுறுத்தவும் பயன்பட்டுள்ளது. கடந்தாண்டு 11 புயல்கள் வீசியபோது, 6 ஆயிரம் மீன்பிடி படகுகள், 40 ஆயிரம் மீனவர்கள் பாதுகாப்பாக துறைமுகங்கள் செல்ல கடலோர காவல்படையின் நடவடிக்கை உதவியது.
கடலோர காவல்படை வார கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக, இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டலம் மெய்நிகர் ஊடகங்கள் மூலம் மீன்பிடி சமூகங்களுடன் சிறப்பு உரையாடலை நடத்தியது. இதில், சுற்றுச்சூழல், கடற்பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கான கட்டுரை, ஓவியப்போட்டிகளை கடலோர காவல்படை நடத்தியது.
கடலோர காவல்படையின் செயல்பாடுகளை குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன்பிடிப்பு: இலங்கை மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திடம் ஒப்படைப்பு!