சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கியின் ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு பின் வங்கிக் கிளையிலேயே வந்து சில்லறை கேட்பதாகவும், இதனால் தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால் ஏடிஎம்கள் நிறுவப்பட்டதற்கான நோக்கமே நிறைவேறாமல் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்தியன் வங்கி ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக குறைந்த மதிப்புடைய 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை நிரப்ப முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட செலவுகளுக்குச் சிறிய தொகை எடுக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும் என வங்கி நிர்வாகம் கருதுகிறது.