சென்னை: இந்தியாவில் 77-வது சுதந்திர தின விழா வரும் (ஆகஸ்ட்15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது உச்சக்கட்ட பாதுகாப்பு 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 77 வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விழாவினை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக ஒன்றிய உள்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.
இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறையானது 7 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்பாக உயர்த்தப்பட்டு வரும் 16 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வெளிவட்ட பகுதியில் சென்னை மாநகர போலீசாரும், உள்வட்ட பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை விமானநிலையத்தில் பாா்வையாளா்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம் ,எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களை பயணிகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப் பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.
விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வர வேண்டும் என அதிகாரிகள் பயணிகளை அறிவுறுத்தி உள்ளனா்.
சென்னை விமானநிலையம் முழுவதும் ஏழு அடுக்கு பாதுகாப்புடன் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த ஏழு அடுக்கு பாதுகாப்பு முறை 16 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தாலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு விபத்தில் 4 பேர் பலி: லாரி ஓட்டுநர் கைது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் அஞ்சலி!