சென்னை: சரியான திட்டமிடாததாலும், மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நடைபெறாமல் இருப்பதாலும், சென்னையில் மழைக்காலங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக . முன்னாள் சிறப்புத் தலைமை பொறியாளர் அ. வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈ டிவி பாரத்துக்கு அளித்த பிரத்யக பேட்டியில் அவர் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் கடந்த சில மாதங்களாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், சென்னை பெருநகராட்சி மற்றும் அதிகாரிகள் இந்த பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவில்லை. எனவே சென்னையில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின்போது மழைநீர் தேங்கியது என கூறினார். இந்த பணியினை வேறு முறையில் செயல்படுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
கேள்வி:ஏன் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிக மழைநீர் தேக்கத்திற்கு காரணம் என்ன?
பதில்:சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மழை பெய்தாலே மழைநீர் குடியிருப்பு மற்றும் தெருக்களில் தேங்குவது இயல்பான ஒன்றாகி விட்டது. இதற்கான காரணம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சில திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்த குழுமம் பெரிய கட்டடங்கள் மிகவும் தாழ்வான பகுதிகளில் கட்ட அனுமதி கொடுத்துள்ளது. பல இடங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமித்தும் கட்டப்பட்டு உள்ளன. எனவே மழையின் போது நீர்வழிகள் இல்லாததால் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருக்கிறது.
சரியாக திட்டமிடாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், அனுமதி வழங்குவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இன்னும் சென்னையில் சில சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்குகிறது. எனவே திட்டமிடுதல் மற்றும் அதனை செயல்படுத்துவதிலும் தவறுகள் உள்ளன. எனவே நமது உள்ளாட்சி அமைப்புகள் பெரிதும் தோல்வி அடைந்துள்ளன என்றே சொல்லலாம்.
கேள்வி:நீதிமன்ற உத்தரவுப்படி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றப்பட்டுள்ளதா?
பதில்:நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறது. மேலும் இதற்கான அறிவிப்பினை மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதில் சில அரசியல் குறுக்கீடுகள் உள்ளது. ஏனெனில் நீர் நிலை அருகில் உள்ள வீடுகளை வெளியேற்றினால் தங்களது வாக்கு வங்கிகள் போய்விடும் என சில அரசியல் கட்சிகள் தலையீடு உள்ளது. வருவாய் துறையும், பொதுப்பணி துறையும் காவல் துறையும் ஒன்றிணைந்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கேள்வி:மழைக்காலங்களில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றுவது வழக்கமாகி விட்டது. என்ன தீர்வு?
பதில்:இதுவும் ஒரு மோசமான திட்டமிடுதலால் நடக்கிறது. இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. எங்களது சங்கமும் இந்த ஏரிகளை தூர்வார வலியுறுத்தி வருகிறது. தூர்வாரப்படாததால் அவற்றின் கொள்ளளவு 3.35 டி.எம்.சி குறைந்துள்ளது. எனவே அதிகமாக மழை பெய்யும்போது உபரி நீர் திறந்து விடப்படுகிறது. எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் தற்போது உள்ள ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11 டி.எம்.சியிலிருந்து 17 டி.எம்.சி வரை உயர்த்தலாம். மேலும் கடல் நீரை குடிநீர்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
கேள்வி:நதிநீர் இணைப்பு திட்டம் என்ன ஆயிற்று?
பதில்:தற்போது ஒரு சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த அதிமுகவில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அமைந்த அரசு இந்த திட்டத்தை பற்றி பேசியது. எனினும் பிறகு இந்த திட்டம் சாத்தியமில்லை என தெரிய வந்தது. தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு மொத்தமாக 1260 டி.எம்.சி தேவைப்படுகிறது. ஆனால் மழைக்காலங்களில் நமக்கு 2600 டி.எம்.சி கிடைக்கிறது. எனவே நதிநீர் இணைப்பு திட்டங்கள் கனவு திட்டமாகவே இருக்கட்டும். நாம் தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்தாலே போதும்.
கேள்வி:கன மழை பெய்தும் தமிழ்நாட்டில் 100 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டுள்ளன என தரவு சொல்கிறது. ஏன்?
பதில்:தமிழ்நாடு நீர் வளத்துறை தரவுப்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் 100 விழுக்காடு தண்ணீர் நிரம்பியுள்ளது. எனினும் உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் மழை இல்லாததால் நீர் நிலைகள் வறண்டு போயிருக்கலாம்.
டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. இதற்கான முக்கிய காரணம் கடலோர மாவட்டங்களில் உள்ள தனியார் இறால் பண்ணைகள். இந்த இறால் பண்ணையின் உரிமையாளர்கள் கடற்கரையிலிருந்து சிறிது தூரத்திற்கு 3 மீட்டரிலிருந்து 5 மீட்டர் வரை தடுப்பு சுவர்கள் கட்டியுள்ளனர்.
எனவே மழைக்காலங்களில் உபரி நீர் கால்வாய் வழியே சென்று கடலில் கலக்க முடியாமல் போய்விடுவதால் தண்ணீர் வயல்வெளிகளில் தேங்கி நெற்பயிர்களை மூழ்கச் செய்கிறது. கோடியக்கரையிலிருந்து பூம்புகார் வரை சுமார் 80 கிமீ தூரத்திற்கு இந்த தடுப்பு சுவர்கள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது" என பதிலளித்தார்.
இதையும் படிங்க:வெள்ளக்காடான ராசிபுரம் - அமைச்சர்கள் வராததால் மக்கள் வேதனை!