சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, கல்வி குழுமங்கள், மருத்துவமனைகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள், மதுபான ஆலைகள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்தாவது நாளாக இன்று (அக்.09) அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனையில், எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் இரண்டு வருமான வரித்துறை துணை ஆணையர் தலைமையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன் நடத்திவரும் 12 நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு தொடர்புடைய மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும், சீரிடப்பட்ட கவரில் கொண்டு வந்து அதனை அடையாறு இல்லத்தில் வைத்து இரண்டு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சினை? திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில் இன்று மாலையுடன் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை முடிய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மொத்த ஆவணங்களும் இரண்டு ட்ரங்க் பெட்டிகளில் வைத்து அடைக்கப்பட்டு, இரண்டு பெட்டிகளையும் கார்களில் ஏற்றும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணங்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட போதிலும், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன் இருவரிடமும், தொடர்ந்து வருமான வரித்துறை உயர் அதிகாரிகளின் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேசியம், தெய்வீகத்தை முன்னிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது: கே.பி.ராமலிங்கம் கருத்து!