சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருள்களை சப்ளை செய்யக்கூடிய முக்கிய நிறுவனங்களில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், 40 இடங்களில் இன்று (செப்.20) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த நிறுவனங்களில் இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்கள் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கம் அடுத்துள்ள தலைமைச் செயலக காலனி பகுதியில், ஒரே கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதனை அடுத்து சென்னை வேப்பேரி அடுத்த மகாவீரர் காலனியில் இயங்கி வரும் பிஎன்டிபி இன்பரா ட்ரேட் லிட் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இதே முகவரியில் வி.எஸ்.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்ததுள்ளது.
இந்த நிறுவனங்கள் இயங்கி வரும் கட்டடத்தில் தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை காவல் துறையினரின் பாதுகாப்பில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்திற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருள்கள் சப்ளை செய்யக்கூடிய முக்கிய நிறுவனமாக இருக்கும், ராதா இன்ஜினியரிங் எனப்படும் நிறுவனத்திற்கும் இருக்கக்கூடிய தொழில் தொடர்பின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த சோதனையானது இன்று மற்றும் நாளையும் தொடரும் எனவும் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவி்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்த வழியே திரும்பிச் சென்ற “அரிக்கொம்பன்”... தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிம்மதி!