சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள பெருங்குடி, கந்தன்சாவடி, ஸ்ரீபெரும்புதூர், ஆவடி சிப்காட் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது இந்த சோதனையானது முழுக்க முழுக்க மென்பொருள் நிறுவனங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்படுவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அமலாகத்துறை மற்றும் வருமான வரித்துறை ஒவ்வொரு துறையில் செய்யப்படும் முறைகேடுகள் குறித்தான புகார்களை பெற்றுக்கொண்டு மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை கைப்பற்றி வருகிறது.
அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு மின்சார துறைக்கு பொருட்களை சப்ளை செய்யக்கூடிய தனியார் நிறுவனங்களை குறிவைத்து அதிரடியாக சுமார் 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது எந்தெந்த நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள், எத்தனை இடங்களில் இந்த சோதனை நடக்கிறது, எதன் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சோதனை தொடர்பான அனைத்து தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.