மதுரையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்
மதுரை கோச்சடைபகுதியில் இயங்கி வருகிறது ஹெரிடேஜ் என்ற ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி. இந்நிறுவனத்திற்கு அருள்தாஸ்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஹெரிடேஜ் ஹோட்டலுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ஹோட்டலில் ஜிஎஸ்டி வரி மற்றும் வருமானங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும், மதுரை கோச்சடை பகுதியில் உள்ள ஹெரிடேஜ் மதுரை ஹோட்டலில் என ஐந்து இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக இந்த ஐந்து இடத்திலும் வருமான வரித்துறை, ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும், அதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, பணம் சிக்கினாலோ தொடர் சோதனையாக நடைபெறும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள காரணத்தினால் பணம் கைமாறலாம் என வருமான வரித்துறை சந்தேக அடிப்படையில் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.