சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை நிர்வாகம், மதுபான ஆலைகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமாக தாம்பரம் அடுத்த சேலையூரில் பாரத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்திலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், பாரத் பல்கலைகழகத்தின் நிர்வாகி மற்றும் அதில் பணிபுரியும் முக்கிய ஊழியர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், பல கல்வி நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டுவந்து, ஜெகத்ரட்சகனின் அடையாறு வீட்டில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சேலையூரில் இயங்கி வரும் பாரத் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி மற்றும் அதில் பணிபுரியும் முக்கிய நான்கு ஊழியர்களை ஜெகத்ரட்சகனின் அடையாறு இல்லத்திற்கு வரவழைத்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெகத்ரட்சகன் வீட்டின் அருகில் இயங்கி வரும் பாரத் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தில் உள்ளே அழைத்துச் சென்று லாக்கர்களை திறந்து, பாரத் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வளவு மாணவர்கள் சேர்க்கை சேர்க்கப்பட்டுள்ளது, அவர்களிடம் எவ்வளவு நன்கொடை வாங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் கைப்பற்றுவதற்காக தீவிர முயற்சியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், அதே பகுதியில் மற்றொரு கட்டடத்தில் இயங்கி வரும் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் நடத்தி வரும் அக்கார்டு இன்டர்நேஷனல் பள்ளியின் கார்ப்ரேட் அலுவலகத்திலும், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்வி நிறுவனங்களில் தான் முக்கியமாக தீவிர சோதனையை வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு சில ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றி அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், அதன் முக்கிய நிர்வாகிகளையும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "திராவிட மாடல் ஆட்சிதான் காமன்வெல்த் நாடுகளின் மையக்கருத்து" - சபாநாயகர் அப்பாவு