சென்னை: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், கட்டட இடிபாடு கழிவுகளை மறுசுழற்சி செய்யும், 360 டன் திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணி, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவுற்று, செயல்பாடுகள் தொடங்கும் நிலையில் உள்ளது.
மேலும், இந்த வளாகத்தில் சுமார் 80 மெட்ரிக் டன் திறன் கொண்ட தோட்டக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில், 40 டன் அளவிலான மரக்கழிவுகள், இளநீர் ஓடுகள் மற்றும் தேங்காய் மட்டைகள் ஆகியவை மறுசுழற்சி செய்யப்பட்டு உரங்களாகவும், நார்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆலை அமைக்கும் பணி
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகளை எரியூட்டி சாம்பலாக்கி, மீண்டும் பயன்படுத்தும் வகையில், 50 டன் திறன் கொண்ட ஆலை (Incinerator Plant) அமைக்கப்பட்டு, சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சாம்பல்கள் மறுபயன்பாட்டிற்கு உகந்த பேவர் பிளாக்குகளாக (Paver Block) மாற்றப்படுகின்றன.
அதுமட்டுமின்றி சின்ன சேக்காடு மாநகராட்சி இடத்தில் குப்பைகளிலிருந்து உயிரி எரிவாயு (Bio CNG) தயாரிக்கும் இரண்டு ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆலையும் தலா 100 மெட்ரிக் டன் கழிவுகளை கையாளும் அளவிற்கு திறன் கொண்டவை. இதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
மேலும், பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் உட்பட மறுசுழற்சி செய்ய இயலாத பொருட்களை எரியூட்டி அவற்றிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் 20 மெட்ரிக் டன் திறன் கொண்ட “பைராலிசிஸ் ஆலை” பணிகள் முடிவுற்று செயல்பாடுகள் தொடங்கும் நிலையில் உள்ளது.
கழிவுகளை உரமாக மாற்றுதல்
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளிலிருந்து, சுமார் 50 முதல் 70 டன் வரையிலான குப்பைகள் மாதவரத்தில் உள்ள மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டு காற்று புகும் முறையில் பதனிடப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது.
இவ்வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்களை கட்டுகளாக மாற்றும் 20 மெட்ரிக் டன் திறன் கொண்ட இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த இயந்திரங்கள் மூலம் கட்டுகளாக மாற்றப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மற்றும் மாதவரத்தில் உள்ள மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர், மேற்குறிப்பிட்ட மறுசுழற்சி மையங்களில் அவற்றின் முழு திறன் அளவிற்கு குப்பைகளை மறுசுழற்சி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.