சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வுக்காலம் 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் மாற்றப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்களின் குடும்பச் சூழ்நிலை மற்றும் நிதித் தேவைக்காக விருப்ப ஓய்விற்கு விண்ணப்பம் செய்கின்றனர். அவ்வாறு விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்கின்றன. உடல் நலனுக்காகவும் சிலர் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பம் செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான மூன்று ஆண்டுகளில், 45 ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். கரோனா காலம் தொடங்கி கடந்த ஆண்டு வரை 35-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை, 17 பெண் ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.
பெண் ஆசிரியர்கள் விருப்ப ஓய்வுபெறுவதற்கு, பணிச்சுமை, உடல் நலப் பாதிப்பு, சொந்த ஊரிலிருந்து தொலைவுக்குச் சென்று பணி செய்வதால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகள் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உயர் கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டுதல் குழு