சென்னைக்கு அடுத்தப்படியாக விழுப்புரத்தில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் மூவாயிரத்து 23 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 1,379 பேர் குணமடைந்தும் 30 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனால் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்னும் 14 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களாக தொழில்களை மேற்கொள்ள முடியாத மக்கள் இன்று முதல் தொழில்களை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏழை, நடுத்தர குடும்பத்தார்கள் தங்கள் தொழிலை இன்று முதல் தகுந்த இடைவெளி விட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தற்போது ஆரஞ்சு மண்டலமாக 24 மாவட்டங்கள், சிவப்பு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர - EXCEPT CONTAINMENT ZONES) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:
- 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றம் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.
- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
- SEZ, EOZ, தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்), 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- மின்னணு வன்பொருள் (Hardware Manufacturers) உற்பத்தி, 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புரங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (Spinning mills) (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 விழுக்காடு பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பம் (IT & ITeS), 50 விழுக்காடு பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
- நகர்ப்புறங்களில் கட்டுமானப் பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.
- அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
- பிளம்பர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.
- மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
- அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
- மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
- நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் (Malls) மற்றும் வணிக வளாகங்கள் (Market complexes) தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினை பின்பற்றியும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (STANDARDS OPERATING PRODUCERS) தீவிரமாக கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், ஐந்து நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் (AGRO PROCESSING), தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.
கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.
பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.
நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புர தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 விழுக்காடு பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:
- பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
- வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
- திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
- அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுப்போக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
- பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து.
- மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.
- தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
- இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
இதையும் படிங்க...ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்