தமிழ்நாட்டில் ஒன்பது மத்திய சிறை உள்பட மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இங்குள்ள தண்டனைக் கைதிகளுக்கு கைத்தொழில் கற்றுக்கொடுக்கும் நோக்கில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பணிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
துணி நெய்தல், காய்கறிப் பயிரிடுதல், காலணி தயாரிப்பது மட்டுமின்றி மெழுகுவர்த்தி, எழுது பொருள்கள், அட்டையாலான கோப்புகள் போன்றவை சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படுகின்றன. தற்போது கரோனாவிற்காக முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அப்படி விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் சிறைக்கு முன் இருக்கும் ஃபிரிடம் பஜாரில் சந்தைப்படுத்தப்பட்டன. அதன்மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அப்படி சிறைக்கைதிகள் தயார் செய்யும் பொருள்கள் மூலம் அதிக லாபம் ஈட்டுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் காரணமாக சென்னை புழல் சிறையில் ஜூன் 17ஆம் தேதி 40 தண்டனைக்கைதிகள், தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கரோனா பரவல் காரணமாக விசாரணை கைதிகள் உள்பட 3500-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கரோனா பரவலைத் தடுக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இருந்தபோதிலும், தொழில் பயிற்சிக்காக வேறு மாவட்ட சிறைகளிலிருந்து வந்த கைதிகள் மூலம் புழல் சிறை கைதிகளுக்கு கரோனா பரவியது. இதனால் புழல் சிறையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைப் பார்த்தவர்கள் உள்பட 33 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கரோனா பரவலைத் தடுக்கும் வண்ணம் சிறைக் கைதிகளின் பெட்ரோல் விற்பனை நிலையம், கைவினைத் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சிறைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், கரோனா பரவல் காரணமாகவும் உற்பத்திப் பொருள்களின் வரத்து இல்லாமல் போனதாலும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு தற்காலிகமாக ஒரு மாதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க...’ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்’ - எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் திட்டவட்டம்