சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் ’விஜய்’ நடிப்பில் வெளிவந்த ’பீஸ்ட்’ திரைப்படத்தை அம்பத்தூரில் உள்ள திரையரங்கிற்கு பார்க்கச்சென்ற அம்பத்தூர் அன்னை சத்யா நகரைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எம்.கே.பி நகரைச்சேர்ந்த இளைஞர்கள் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் காரணமாக மே மாதம் எம்.கே.பி நகரைச்சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞரை அம்பத்தூர் உதவி ஆணையர் அலுவலகம் அருகில் ஒரு தொழிற்சாலை வாசலில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக அன்னை சத்யா நகரைச்சேர்ந்த 16 வயதான சிறுவன் சண்முகம் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்து, பின் அவர்கள் வெளிவந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக அன்னை சத்யா நகரைச்சேர்ந்த சண்முகத்தின் அண்ணன் கார்த்திக்கை கொலை செய்வதற்கு வெகு நாட்களாக எம்.கே.பி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் உட்பட அவருடைய நண்பர்கள் திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
பழிக்குப்பழி தீர்ப்பதற்காக காத்திருந்து வேலைக்குச்செல்லாமல் வீட்டிலேயே இருந்த அன்னை சத்யா நகரைச்சேர்ந்த சண்முகத்தின் அண்ணன் கார்த்திக்கை நோட்டமிட்டு, பட்டப்பகலில் சுமார் ஒரு மணி அளவில் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த கார்த்திக்கை, நான்கு பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் துரத்தி வந்து, சரமாரியாக தலை, கை, கால், வயிறு உள்ளிட்டப்பகுதிகளில் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக கார்த்திக்கின் தந்தை ராஜா (வயது 48) என்பவர் கொடுத்தப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார், கார்த்திக்கை கொலை செய்த 9 பேர் கொண்ட கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதற்கிடையில் செல்போன் சிக்னல் வைத்து தேடிய போது அம்பத்தூர் ரயில் நிலையத்தைக்காட்டியது. இதனைத்தொடர்ந்து அங்கு உடனடியாக விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அம்பத்தூரில் இருந்து வெளியூர் தப்பிக்க முற்பட்ட 9 பேரைச்சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில் சிவானந்த நகரைச்சேர்ந்த முக்கிய குற்றவாளி வெங்கடேஷ், பாலாஜி, விக்ரம் உள்பட 9 பேர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்னாள் வன்னியர் சங்க பிரமுகர் கொலையில் சிறுவன் உட்பட 13 பேர் கைது