சென்னை: கரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் நேரடியாக நடைபெற்ற சென்னை ஐஐடியின் 59 வது பட்டமளிப்பு விழாவில், 2,084 மாணவர்களுக்கு 2,620 பட்டங்கள் (இணை மற்றும் இரட்டைப் பட்டங்கள் உள்பட) வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழா சென்னை ஐஐடி நிர்வாகக் குழுத்தலைவர் பவன் கோயங்கா தலைமையிலும், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார். விழாவில் பேசிய அவர், “மிகச்சிறந்த இக்கல்வி நிறுவனத்தில் படித்தது உங்கள் அனைவருக்கும் பெருமை வாய்ந்த ஒன்றாகும். உங்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இக்கல்வி நிறுவனம், இன்று உங்களைப் பல்வேறு வழிகளில் தயார்படுத்தியுள்ளது என உறுதியாக நம்புகிறேன்.
உங்களுக்காகக் காத்திருக்கும் வாய்ப்புகள் குறித்துப் பேச விரும்புகிறேன். ஒருவர் தனது எதிர்காலத் திட்டங்களைத் தொடங்குவதற்கு, அதிலும் குறிப்பாக இந்தியாவில் தொடங்க இது சரியான தருணம். 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 100 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
டிஜிட்டல் உலகம்: நமது பொருளாதாரம், 50 விழுக்காடு விவசாயம் சார்ந்ததாக இருந்தது. தற்போது 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தொழில்நுட்பத் துறையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அடுத்த பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும்.
எதிர்காலம் டிஜிட்டல் உலகமாகவும், டிஜிட்டல் பொருளாதாரமாகவும் மாறும் என்பது தெளிவாகிறது. பணக்காரர், ஏழை என அனைவரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது நடைமுறை மாற்றம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு போன்றவற்றை கொண்ட நிறுவனங்கள் வணிக ரீதியாக தங்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
வணிக நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளை ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மூலம் வழி நடத்த வேண்டும். தொழில்நுட்ப திறமை அதற்குத் தேவைப்படுகிறது. சுகாதாரம் அல்லது உற்பத்தி போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கும்போதுதான் முன்னிலை வகிக்க முடியும்.
மருத்துவம், உயிர் அறிவியல் போன்றவை அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். இந்தியாவில் 23% பெண்கள் மட்டுமே வேலைக்குச் செல்கின்றனர். இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு , தண்ணீர் பிரச்னை, தரமான கல்வி, தரமான சுகாதாரம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இருப்பினும் பிரச்னைகளுக்கு இணையாக பல்வேறு வாய்ப்புகள் நம் நாட்டில் உள்ளது. இந்திய நிறுவனங்களுக்கு உலளவில் பெரும் மதிப்புள்ளது. அத்தகைய வாய்ப்புகளை வருங்கால தலைமுறையினர் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்” என கூறினார்.
தொழில் ஆராய்ச்சி திட்டங்கள்: இந்த பட்டமளிப்பு விழாவில், 423 பேருக்கு பி.டெக் (25 பேருக்கு ஹானர்ஸ் பட்டம்), 454 பேருக்கு பி.டெக், எம்.டெக் இரட்டைப் பட்டம், 401 பேருக்கு எம்.டெக், 112 பேருக்கு எம்.எஸ்.சி., 38 பேருக்கு எம்.ஏ., 38 பேருக்கு எக்சிகியூடிவ் எம்பிஏ, 68 பேருக்கு எம்.பி.ஏ., 179 பேருக்கு எம்.எஸ், 306 பேருக்கு பி.எச்டி, 90 பேருக்கு தொழில்துறையினருக்கான ஆன்லைன் எம்.டெக் என 2,084 பட்டதாரிகளுக்கு ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேரா. வி.காமகோடி பட்டங்களை வழங்கினார்.
பின்னர் கல்வி நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தொழில் துறைகளிடம் இருந்து இக்கல்வி நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நடவடிக்கைகளுக்காக கணிசமான தொகையை நிதியுதவியாக ஈர்த்துள்ளது.
2021 - 2022 ஆம் ஆண்டில், அமைச்சகம் சார்பில் ரூ.611.47 கோடி மதிப்பிலான 186 திட்டங்கள் பெறப்பட்டன. முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 70 விழுக்காடு அதிகமாகும். தொழில் துறையினருடனான எங்களின் கூட்டுமுயற்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் 609 ஆலோசனை மற்றும் தொழில்துறை சார்பிலான ஆராய்ச்சித் திட்டங்களுக்காக ரூ.279.61 கோடி பெறப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரப்பர் பொருட்கள் தயாரிப்பில் ரப்பருக்கு மாற்றாக மக்கும் பொருட்களை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி!