இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்பேரவைத் தேர்தல் அசாதாரணமான புதிய வரலாறு, புதிய திருப்பம், தமிழ்நாட்டு அரசியலின் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் புத்தெழுச்சி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தப் போகும் தேர்தல். தந்தை பெரியார் என்ற தத்துவம் அக்களத்தில் போராடுவதற்கான பேராயுதம்.
”குலதர்மமா, சமதர்மமா, எது வெற்றி பெற வேண்டும்?” என்ற கேள்விக்கு, சமர்க்களத்தில் வெற்றி வாகை சூடப்போவது சமதர்மமே என்ற பதிலை தமிழ்நாட்டு வாக்காளர்கள் தீர்ப்பாக வழங்க ஆயத்தமாகி அணிவகுத்து நிற்கின்றனர். இது திராவிட மண், சமூகநீதி மண், பெரியார் மண் என்பதற்கு முதற்கட்ட லட்சிய வெற்றி அச்சாரமாக அமைந்துவிட்டது. ‘வட மாநிலங்களில் பிரதமர் மோடிதான் வாக்குகளை வசீகரிக்கும் வசியம் படைத்தவர் என்ற நிலை, இந்த மண்ணில் தலைகீழாக இருக்கிறது என்பது உலகத்தை ‘அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள’ எட்டாவது அதிசயமாகும்!
தமிழ்நாட்டில் பாஜகவின் வேட்பாளர்கள்கூட மோடியை முன்னிறுத்தி, பரப்புரை செய்ய அஞ்சுகின்றனர். இதுவே திராவிட மண்ணுக்குக் கிடைத்த முதல் வெற்றி. முதலமைச்சர் பழனிசாமி, தோல்வி பயத்தால் ஜன்னியில் உளறும் நோயாளிபோல் பேசத் தொடங்கிவிட்டார்.
கட்சியையும் ஆட்சியையும் நடத்த பிரதமர் மோடி உதவினார் என்ற ஈபிஎஸ்ஸின் ஒப்புதல் வாக்கு மூலம், ஈபிஎஸ் ஜெயலலிதாவுக்கும்கூட துரோகமிழைத்தவர் என்பதை அரசியல் உலகிற்குப் பிரகடனப்படுத்துகிறார் என்பது ஒருபுறம். மறுபுறம் பாஜகவின் வேட்பாளர்கள் மோடி முகங்காட்டி வாக்குச் சேகரிக்க அஞ்சி தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர்களின் முகங்காட்டி வாக்கு சேகரிக்கும் வேடிக்கை மனிதர்களாகி வீதியில் நிற்கின்றனர்.
ஸ்டாலின், 1971ஆம் ஆண்டு தேர்தலில் திமுக பெற்ற 184 என்ற ரெக்கார்டை பிரேக் செய்து ஒரு சரித்திர சாதனையையும், புதிய விடியலையும் தருவார் என்பது உறுதி. இது கருத்துக் கணிப்பு அடிப்படையில் அல்ல, நாம் பார்த்த மக்கள் கணிப்பின் அடிப்படையில்" என்று குறிப்பிட்டுள்ளார்.