சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் பதிலுரை வழங்கி பேசினார்.
அப்போது, "கிராமப்புற வளர்ச்சியில் அக்கறை உள்ள அரசு திமுக அரசு. கிராமப்புறத்தில் பிரதான தொழிலாக இருக்கும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை இலவசமாக தந்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான்.
இந்தியாவில் முதல் முறையாக கிராமங்களில் வாழும் ஆதி திராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். மின்னிணைப்புகள் இல்லாத கிராமங்கள் இருக்கக்கூடாது என இலக்கு நிர்ணயித்து நவீன விளக்குகளை ஒளிர செய்தது திமுக ஆட்சி.
தமிழ்நாட்டில் சாதி, மத, இன கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெரியார் பெயரில் நினைவு சமத்துவபுரம் அமைத்ததும்; அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்ட அரசு திமுக அரசுதான்" என்றார்.
இதைத்தொடர்ந்து 28 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
முக்கிய அறிவிப்புகள்
- 5,780 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை மேம்படுத்துதல் வலுப்படுத்துதல் மற்றும் 121 பாலங்கள் 2097 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- நிலத்தடி நீரை அதிகரிக்கவும் நீர்ப்பாசன தேவைகளை நிறைவேற்றவும் 1149 ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பனைகள் உறிஞ்சு குழிகள் கிணறுகள் மற்றும் இதர பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பழைய சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் குடிநீர் கட்டமைப்பு தெரு விளக்குகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 12,525 நூலகங்கள் மேம்படுத்தப்படும்.
- சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக 550 கிராம ஊராட்சி அலுவலக கட்டடங்கள், 15 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள், மற்றும் 500 அங்கன்வாடி மைய கட்டடங்கள் 233.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- திட்டக் கண்காணிப்பினை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
- ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தபடும்.
- சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும்.
- பாதுகாக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளித்தல்.
- ஊரக நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவேடுகள் மற்றும் படிவங்கள் எளிமைப் படுத்தபட்டு முறைப்படுத்தப்படும்.
- ஊரக பகுதிகளில் சுய உதவி குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் 84.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- பெண் கிராம ஊராட்சி செயளர்களுக்கான மகப்பேறு விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்குதல்.
- சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை வலுப்படுத்த 188 கோடி ரூபாய் சூழல்நிதி மற்றும் சமுதாய நிதி வழங்கப்படும்.
உள்ளிட்ட 28 அறிவிப்புகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டார்.
இதையும் படிங்க: மானிய ஸ்கூட்டர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வானதி சீனிவாசன் கோரிக்கை!