கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில், சரக்கு மற்றும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனப் போக்குவரத்தைத் தொடங்கலாம் எனத் தெரிவித்திருந்தது.
ஆனால் கரோனா பரவல் காரணமாக தற்போது பொதுபோக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் மீண்டும் மக்களே பாதிக்கப்படுகின்றனர். வேலையின்மை, சம்பளக் குறைப்பு என பல சிக்கல்களில் மக்கள் உழன்று கொண்டிருக்கும் இச்சூழலில், ஏற்றம் மட்டுமே காணும் எரிபொருளின் விலை அவர்களுக்கு தாங்க இயலாத பாரம்தான்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்கும்போது, ”முன்னர் ஆயிரம் ரூபாய்க்கு பாஸ் எடுத்தால் சென்னை முழுக்க ஒரு மாதம் பயணித்துவிடலாம். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. ஊரடங்கு பொது போக்குவரத்தை முடக்கியதோடு, பெட்ரோல் விலையிலும் ஏற்றத்தை உருவாக்கியுள்ளது. இதை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. மீண்டும் பொது போக்குவரத்து இயங்குவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றார்.
சொந்த வாகனங்களை பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களில் சவாரி செய்பவர்கள் நிலைமை அதோடு மோசமாகிவருகிறது. சமீபத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு சென்ற நண்பர் ஒருவர், ”நான் விமான நிலையத்தில் டாக்சி புக் செய்யும்போது, அதனுடைய கட்டணம் இரண்டு மடங்காக காட்டியது. ஆனால் தேவையின் நிமித்தம் அதில் பயணிக்கத் தயாராகிவிட்டேன். பயணத்திற்கு இடையில் வாகன ஓட்டுநரிடம் இது குறித்து வினவினேன்.
‘இல்லைங்க... இந்த ஊரடங்கு சமயங்களில் சவாரிகள் அதிகம் இருப்பதில்லை. உங்களை இறக்கிவிட்ட பின்னர் நாங்கள் தனியாகத்தான் அடுத்த சவாரிக்கு வர வேண்டும். இதனால்தான் இந்த இருமடங்கு கட்டண முறை. டீசல் விலையும் ஏறிக்கொண்டேயிருக்கிறது’ என ஓட்டுநர் சொல்லி முடித்தார் என அந்த நண்பர் வாகன ஓட்டுநர்களின் நெருக்கடி குறித்து பகிர்ந்துகொண்டார்.
ஒருவேளை பொதுப்போக்குவரத்து இயக்கத்தில் இருந்தால் டாக்சி போன்ற வாகனங்களில் இரட்டிப்பான கட்டணங்களை மக்கள் தவிர்த்திருக்க முடியும். சொந்த வாகனங்களின் பயன்பாடும் குறைந்திருக்கும் என்பதே நிசர்சனம்.
இதையும் படிங்க: தொடர்ந்து உயரும் டீசலின் விலை - பெரும் சிக்கலில் போக்குவரத்துத் துறை!