சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்கக் கோரி நாகேஸ்வர ராவ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், பிரகாஷ், குமாரசாமி ஆகியோர் விவசாய நிலத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கொண்டு பைப்புகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அதை லாரிகள் மூலம் பல இடங்களுக்கு கொண்டு போய் விற்பதாகவும், இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டப்பட்து. தண்ணீர் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகிறா, அல்லது சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறதா, அனுமதி பெற்று நீர் எடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், பொதுமக்கள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஜூலை 1ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஆய்வில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அங்குள்ள மோட்டார்கள், தண்ணீரை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.