சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஐந்து வருடத்திற்கு செயல்பட மத்திய அரசு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளைகளின் நிர்வாகிகள் அலுவலகங்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கூறி, தேசிய புலனாய்வு அமைப்புகள் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பு தொடர்பான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து மத்திய அரசுக்கு தெரியாமல் நிதியானது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு கிடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தொடர்ந்து இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பும் அமலாக்கத்துறையும் இணைந்து இந்த சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை வேப்பேரியில் உள்ள தக்கர் தெருவில் வசித்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் இரண்டு வாகனங்களில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று பெரியமேடு பேக்ர்ஸ் ரோட்டில் புதிய விடியல் பத்திரிகையின் அலுவலகத்திலும், ஜோதி வெங்கடாசலம் தெருவில் இருக்கும் புதிய விடியல் பத்திரிகையின் ஆசிரியரும், தொழில் அதிபருமான இப்ராஹிம் அஸ்கர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக மாநிலத் தலைவராக இருக்கும்பொழுது அமைப்பிற்கு வந்த நிதிகள் தொடர்பாக ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், சோதனைக்குப் பிறகு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் விடியல் பத்திரிக்கை ஆசிரியர் இப்ராஹிம் அஸ்கர் ஆகிய இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐஎப்எஸ் நிர்வாக இயக்குநர் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது!