நங்கநல்லூர், பழவந்தாங்கலைச் சுற்றி 1,500 குடும்பங்கள் உள்ள நிலையில், சில தனியார் தண்ணீர் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்துவருவதை எதிர்த்து நங்கநல்லூரைச் சேர்ந்த இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரது அமர்வு, சட்டவிரோதமாக நீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நங்கநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் தரப்பில் சட்டவிரோதமாக நீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக புகைப்பட ஆதாரங்கள் வழங்கப்பட்டன. இந்தப் புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என எந்த அடிப்படையில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது? என கேள்வி எழுப்பினார்.
அது தொடர்பான விவரங்களை காவல் துறை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றவர்களின் விவரங்கள், நீர் எடுத்துச் செல்வதற்கான வாகன அனுமதி பெற்ற விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.