சென்னையில் ஆவடியை அடுத்த திருநின்றவூர் - பெரியபாளையம் சாலையில் உள்ள பாக்கம் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கார் ஒன்றை, தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், இரண்டு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
கார் ஓட்டுநரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருவள்ளூர் அருகே உள்ள பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் (32) என்பதும், தாம்பரத்தில் நடத்திவரும் டீ கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா பொருள்களை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா பொருள்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!