சென்னை: அரசின் திட்டங்களுக்கு எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்குவதால், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரைத்து உள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் அலுவபள்ளி என்னுமிடத்தில் அணை கட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்கிய அம்மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது.
தவறான தகவலை தெரிவித்து, சுற்றுச்சூழல் சட்டத்துக்கு முரணாக, அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக கூறி, சுற்றுச்சூழல் ஒப்புதலை ரத்து செய்தது. மேலும் மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவில், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்கள், முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் மாநில அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆர்வமுடன் செயல்படுவதாக தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோருக்கு அமர்வு கண்டனம் தெரிவித்தது.
மேலும், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களை மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும், அதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும் எனவும், தீர்ப்பாயம் பரிந்துரைத்து உள்ளது.
இதையும் படிங்க: முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையக் குழு ஆய்வு - பராமரிப்புப் பணிகள் குறித்து கண்காணிப்பு!