சென்னை: 'கதி' அல்லது பாலின முன்னேற்றத்துடன் நிறுவனங்களை உருமாற்றும் முன்முயற்சியின் மூலம் கொள்கைகளை உருவாக்கிச் செயல்படுத்துவதுடன், சிக்கல்களை முறையாகவும், சரியான நேரத்திலும் தீர்க்க முடியும்.
பாலின உணர்திறன் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரம் அளிக்க மாதிரியை உருவாக்கும் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் தொலைநோக்குத் திட்டத்துக்கு சென்னை ஐஐடி பங்களிப்பை வழங்க ஆர்வமாக உள்ளது.
'ஸ்டெம்' துறைகளில் பெண்கள் முன்னேற்றம்
குறிப்பிட்ட பாலின அடிப்படையிலான பிரச்னைகளை வெளிக்கொணரும் வகையில், இந்த அளவிடும் முறையை செயல்படுத்தும் 30 முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 'ஸ்டெம்' திட்டத்தில் சென்னை ஐஐடியின் பங்கு குறித்து இயக்குநர் காமகோடி தெரிவிக்கும்போது, "அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சிகள் மிகவும் முக்கியமானவை. சென்னை ஐஐடியின் மேலோங்கிய நோக்கங்கள் இதில் இணைந்துள்ளன. 'கதி' (GATI) முன்முயற்சிக்கு முழுமையாக சென்னை ஐஐடி தனது ஆதரவை வழங்கும்.
உறுதியான, நேர்மையான மாற்றத்தை உருவாக்கி அதன்மூலம் பாலின விகிதாசாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 'கதி' திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன் கூடிய பாலின சமத்துவ சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி மிராண்டா ஹவுஸ் முன்னாள் முதல்வர் பிரதிபா ஜாலி மற்றும் அவரது குழுவினர், பாலின காலநிலையை நிறுவன ரீதியாக மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்வதற்காக பிரத்யேக இந்திய தோற்றத்துடன் கூடிய வழிமுறையை உருவாக்கி உள்ளனர்" என்றார்.
நாடு தழுவிய அளவில் சென்னை ஐஐடியும் தேர்வு
பெண்கள் 'ஸ்டெம்' (STEM) துறைகளை தொழிலாக மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலான 'கதி' (GATI) திட்டம் குறித்து, சென்னை ஐஐடி ஒருங்கிணைப்பு அலுவலர் ப்ரீத்தி அகலாயம் கூறும்போது, "அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சி மிகச் சரியான நேரத்தில் எங்களை வந்தடைந்துள்ளது. சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் பாலின சூழலை மேம்படுத்தும் வகையில் குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த கல்வி நிறுவனத்தின் தலைமையும், நிர்வாகமும் 'கதி' குழுவால் உருவாக்கப்பட்ட பாலின சமத்துவ சாசனத்தின்படி பணியாற்ற உறுதிபூண்டுள்ளது. மருத்துவர் ஜாலி உருவாக்கிய கட்டமைப்பின்கீழ் சுய மதிப்பீட்டுக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது" என்றார்.
இந்த திட்டம் குறித்து பேசிய திட்டமிடல் துறையின் முதல்வர் லிகி பிலிப், "பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு அதிகாரமளிக்கவும், ஊக்குவிக்கவும், பல்வேறு முன்முயற்சிகளை (Women leading IIT Madras - WLI) சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 'கதி' (GATI) திட்டம் மிகவும் நம்பிக்கைக்கு உரியது; சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் சோதனை முயற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடியும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம்..
- கருத்தரங்கு தொடர் - பல்வேறு துறைகளை சார்ந்த பெண் தலைவர்களிடம் இருந்து கதைசொல்லல்.
- திறன் மேம்பாடு நடவடிக்கைகள் - தொழில் முன்னேற்றம், ஊழியர்களுக்கான வலையமைப்பு பட்டறைகள்.
- பெண் ஆராய்ச்சியாளர்களான கல்வியாளர்கள் ஆதரவுடன் - இயக்கம் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
- சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் - இளம் பெண்களிடம் 'ஸ்டெம்' துறையில் விருப்பம் ஏற்படும் வகையில் பரப்புதல்.
- பேராசிரியைகளின் சர்வதேச இயக்கத்திற்கு ஏதுவாக ஒத்துழைப்புகள், திட்டங்களை உருவாக்குதல் போன்றவை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச அறைகலன் பூங்கா: இதிலுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?