சென்னை: ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்களில் பல் மருத்துவக் கருவிகளுக்கு நீராவி அடிப்படையிலான கிருமி நீக்க செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.
கிராமப்பகுதிகளில் மின் உற்பத்தி மற்றும் இதர பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அடிப்படையிலான சார்ஜ் செய்யப்படும் கையடக்க நீராவி சிலிண்டர்களைப் பயன்படுத்தி 'கிருமி நீக்கம்' செய்வதற்கான புதிய முறையை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் சூரிய வெப்ப நீராவி அடிப்படையிலான கிருமி நீக்க செயல்முறையை உருவாக்கியுள்ளனர்.
மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தும்போது, பல்மருத்துவக் கருவிகளின் கிருமி நீக்கத்திற்கு இதனைப் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் காலநிலை மாற்றம் மற்றும் தூய்மையான ஆற்றல் (C3E) பிரிவு நிதி அளித்துள்ளது.
கிராமப்புறங்களில் மின் உற்பத்தி, நீராவி உற்பத்தி மற்றும் இதர பயன்பாட்டிற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அடிப்படையில் சூரிய ஒளி போன்றவை மூலம் சார்ஜ் செய்யப்படும் நிலையங்களை இதற்காக பயன்படுத்தி வருகின்றனர். எடுத்துச் செல்லக்கூடிய வகையில் சேமிக்கப்படும் நீராவியைப் பயன்படுத்தவும், கருவிகளை திறம்பட கிருமி நீக்கம் செய்யவும் சிறப்புக் கிருமி நீக்க அறைகளையும் இக்குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
ஐஐடி வளாகத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் இதற்கான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பின் வெளியிடங்களில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐஐடி சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.
ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் சத்யன் சுப்பையா இது தொடர்பாக கூறுகையில், "கிராமப்புற சுகாதார வசதிகளால் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு தண்ணீர் மற்றும் போதிய மின்சார வசதியின்மை, முறையற்ற கிருமி நீக்கத்திற்கும் சிகிச்சைக்குப் பிந்தைய நோய்த்தொற்றுக்கும் காரணமாக அமைகிறது. அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை பாதுகாப்பாக கிருமி நீக்கம் செய்வதும்; சுகாதாரப் பாதுகாப்புத்துறையின் முக்கிய அம்சங்களாகும்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "அறுவை சிகிச்சை சாதனங்களை கிருமி நீக்கம் செய்யவும், ‘தொலைதூரப் பகுதிகளில் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தும் சாதனங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். சோலார் நிலையங்களில் அல்லது வேறு வழிகளில் உற்பத்தி செய்யப்படும் நீராவியை கையடக்கப் பாத்திரத்தில் சேமித்துக் கொண்டு, கிருமி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் இதனை, தொலைதூர இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்வதேச உணவு தினம் : பட்டினியில்லா சமுதாயத்தை உருவாக்க போருக்கு தயாராகும் பசி!