சென்னை: சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 'பிவோட்' என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இது ஒரு தனிநபருக்கு புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களைக் கணிக்கக் கூடியதாகும். இந்த கருவி புற்றுநோய் சிகிச்சை உத்திகளை வகுப்பதிலும் உதவக் கூடியதாகும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோயானது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. 2020இல் ஆறில் ஒரு மரணம் இந்த நோயால் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் என்பது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். இது புற்றுநோய்களில் ஏற்படும் பிறழ்வுகள் அல்லது கட்டியை அடக்கும் மரபணுக்கள் அல்லது இரண்டும் காரணமாக ஏற்படலாம். இருப்பினும், அனைத்து பிறழ்வுகளும் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இல்லை. எனவே, புற்றுநோய் சிகிச்சை உத்திகளை வகுக்க புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுக்களை அடையாளம் காண்பது முக்கியமாகும்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 'பிவோட்', ஒரு தனிநபருக்கு புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி டீன் பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஃபிரான்டியர் இன் ஜெனடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன (https://doi.org/10.3389/fgene.2022.854190).
இதுகுறித்து ஆராய்ச்சி குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர். கார்த்திக் ராமன் கூறுகையில்," புற்றுநோய் ஒரு சிக்கலான நோயாக இருப்பதால், ஒரே சிகிச்சையின் மூலம் அதைக் கையாள முடியாது. புற்றுநோய் சிகிச்சை தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தை நோக்கி மாறும்போது, நோயாளிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்படும் மாதிரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் கழிவுகளிலிருந்து பயோ எத்தனால்: சென்னை ஐஐடி ஆராய்ச்சி