ஆரம்பக்கட்ட தொழில்முனைவோர்கள் தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டு தொழில்களில் வெற்றிகளைக் குவித்திட உதவும் புத்தகத்தை, ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் குழுவினர் எழுதியுள்ளனர். பயிற்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் ஆரம்பக்கட்ட மற்றும் பலரால் ஒரங்கட்டப்பட்ட பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான முயற்சி இப்புத்தகம். ஐஐடியில் மேலாண்மை ஆய்வுகள் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.தில்லை ராஜன், பேராசிரியர் ஜி.அருண்குமார், பேராசிரியர் சஜி மேத்யூ ஆகிய மூவரும் இணைந்து எழுதிய 400 பக்கங்களின் மொத்த தொகுப்பு தான் இந்தப் புத்தகம். இதற்கு 'தோடுவனம் தேடி' எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த புத்தக வெளியீட்டு விழா, ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று (டிச.03) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், 'தோடுவனம் தேடி' புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆரம்பக்கட்ட தொழில்முனைவோர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும்படி, அவர்கள் உயரத்தை அடைந்திடத் தேவையான ஊக்குவிக்கும் வார்த்தைகள் இதில் அடங்கியுள்ளது. இந்தப் புத்தகம் மாணவர்களும் சாமானியர்களும் வணிகம் நடத்துவதன் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவும்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் ஏ.தில்லை ராஜன், “தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் விரிவுரைகளை அச்சு வடிவத்தில் ஒருங்கிணைப்பதே 'தோடுவனம் தேடியின்' நோக்கம். தொலைதூரம் அல்லது பிற தடைகள் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ஏரளாமான தொழில்முனைவோரை இந்தப் புத்தகம் மூலம் அணுகிவிடுவோம். தொழில்முனைவோர் சமூகத்தில் இந்தப் புத்தகம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
![ே்ே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/dr-tamaswati-ghosh-ceo-iitmic-with-shri-kamal-hassan-during-his-visit-to-iit-madras-research-park-on-3rd-dec-2020_0312newsroom_1606997652_420.jpg)
புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, ஐ.ஐ.டி.எம் ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் இன்குபேஷன் எக்கோ சிஸ்டம் அமைப்புகளை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டார். இந்த புத்தகத்தை வானவில் பப்ளிகேஷன்ஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.