சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று (ஜனவரி 31) 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு நடக்கிறது. இந்தியாவுக்கும் ஜி20 உறுப்பு நாடுகளுக்கும் இடையில் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சென்னையில் பிப்ரவரி 1, 2 தேதிகளில் ஜி20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக ஜி20 கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வையொட்டி சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட உள்ளனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநரும் பேராசிரியருமான காமகோடி கூறுகையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கல்விக்காகப் பயன்படுத்துவதில் சென்னை ஐஐடிக்கு சிறந்ததொரு வரலாறு உண்டு. புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் ஆன்லைன் முறையில் பி.எஸ். பட்டம் வழங்கும் திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
அதுபோல, ஜி20 கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும். ஜி20 நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்ளடக்கிய மற்றும் சமமான கல்வியை தரமாக வழங்குவது எப்படி என்று பங்கேற்பாளர்கள் விவாதிப்பார்கள் எனத் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி, ஓஈசிடி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும், இந்திய கல்வியியல் உறுப்பினர்களும், ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியியல் பங்கேற்பாளர் இடம்பெறுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சுகாதாரத்துறை சென்னை ஐஐடியுடன் இணைந்து ஆராய்ச்சி - அமைச்சர் மா.சு