சென்னை : திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கம் கிராமத்தில் பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்களுக்கு உதவும் வகையில், சந்தையில் அதிகம் விற்கப்படும் நுண்ணலை அடுப்பில் (Microwaveable Cooking ) பயன்படுத்தக்கூடிய களிமண் பாண்டங்கள், பல்வகைக் கலைப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சேமிப்புக் கொள்கலன்களைத் தயாரிக்க பொதுஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸின் ஊரகத் தொழில்நுட்பச் செயற்குழு, மாறி வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள மண்பாண்ட உற்பத்தி கலைஞர்களுக்கு உதவ, மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தக்கூடிய வகையில் பாண்டங்களைத் தயாரிக்க பொது ஆலையை நிறுவ உதவியுள்ளது. சந்தையில் இந்தப் பொருட்களின் மதிப்பு கூடியிருப்பதால், இது பாரம்பரியக் மண்பாண்ட கலைஞர்களுக்கு நிலையான வருவாய் ஈட்ட உதவும்.
சென்னை ஐஐடி உதவி
பல பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன. கைவினைஞர்களின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தித் திறனை மட்டுமல்லாமல் கைவினைஞர்களின் ஊதியத்தையும் மேம்படுத்த கூடுதல் திறன் மற்றும் தயாரிப்புப் பயிற்சியுடன் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கத்தில் பொது ஆலை ஒன்றைச் செயல்படுத்த ஐஐடி மெட்ராஸ் உதவுகிறது.
மண்பாண்ட கலைஞர்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இன் தென்மண்டல பைப்லைன்ஸ் (ஐஓசிஎல்-எஸ்ஆர்பிஎல்) பிரிவின் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் நாகர்கோவிலில் உள்ள அரசு சாரா அமைப்பான சமூக மேம்பாட்டு மையத்தைச் செயல்பாட்டுக் கூட்டாளியாகவும் கொண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் நிறுவனத்துடன் (CGCRI) இணைந்து ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் மண்பாண்ட கலைஞர்களுக்கு உதவுகிறது.
இந்த முன்னெடுப்பில் ஐஐடி மெட்ராஸின் பங்களிப்பு குறித்து வலியுறுத்திப் பேசிய பேராசிரியர் அபிஜித் பி தேஷ்பாண்டே, “ஒரு நிறுவனத்தின் உள்ளே உருவாகும் தொழில்நுட்ப மேம்பாடு, பல்துறைகளுடனும் தொடர்பு கொண்ட ஒரு முன்னெடுப்பாக உருவெடுப்பது அவசியம். அந்த வகையில் அரசு அமைப்புகள், உள்ளூர் கைவினைஞர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பயன்களைப் பகிர்ந்தளிக்கிறது.
தொழில்நுட்ப மேம்பாடு
இது மேலும் மேம்பட, அந்தக் கைவினைஞர்களின் தேவைகளையும் கண்டறிந்து அவற்றை மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சென்று சேர்த்து, அதற்கேற்பத் தொழில்நுட்பத்தில் மேம்பாட்டைக் கொண்டு வரலாம்“ என்றார்.
இதையடுத்து, மையத்தின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே, “களிமண் உற்பத்தித்திறனையும் தரத்தையும் அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான உரிமை அதிகரிக்கிறது. மேலும்,மையத்தின் செயல்பாடுகளைச் சுற்றி வேலை வாய்ப்புகளும் பெருகுகின்றன” என்றார்.
களிமண் பொருள்கள் ஊக்குவிப்பு
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். சாவந்த், பல்வேறு கிளஸ்டர்களில் இதுபோன்ற வாழ்வாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, “சமூக மேம்பாட்டு மையம், சி.எஸ்.டி., கன்னியாகுமரியின் இயக்குநர் டாக்டர் பகவதீஸ்வரன், “இந்த மையத்தின் செயல்பாட்டு மாதிரியை விவரித்தார். மேலும், இந்தத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மண்பாண்ட கலைஞர்களுக்கான கையேடு ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட ஐஓசிஎல் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.சாவந்த் பெற்றுக்கொண்டார்.
காட்சிப்படுத்துதல்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (டிஎன்எஸ்ஆர்எல்எம்) திட்ட அலுவலர் பி. மல்லிகா, இந்த மையத்தைத் தொடங்கி வைத்ததுடன், மேலும் புதிய கிளஸ்டர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களிலும் இந்தத் தொழில்நுட்ப பரவலை மேம்படுத்துவதில் ஆர்வம் வெளியிட்டார்.
பயிற்றுவிக்கப்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் வீட்டு உபகரணங்கள், அதிக சந்தை மதிப்புகள் கொண்ட நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தக்கூடிய களிமண் பாண்டங்கள், கலை பொருள்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட களிமண் பொருள்களை காட்சிப்படுத்தினர்.
இந்த மையத்தின் மூலம் பெறப்படக்கூடிய முக்கிய விளைவுகள்:
- மண்பாண்ட கலைஞர்களின் வருவாய் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.
- பாரம்பரிய மண் பாண்டப் பொருள்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மூலம் நான்கு மடங்கு சந்தை மதிப்பு கூடும்.
- பெருமளவு சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதித் தரம் அதிகரிக்கும்
- பயிற்சி பெறுவோர் நேரடிப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் மூலம் தொழில் முனைவோராகவும் வாய்ப்பு
- மாநிலத்தில் உள்ள மற்ற மண்பாண்டத் தொழில் மையங்களிலும் இம்முறை தழுவப்படும் வாய்ப்பு
- பல்வேறு வகையான களிமண் பொருள்களின் உற்பத்தி தொடர்பான வன் மற்றும் மென் திறன்களில் இதுவரை மொத்தம் 82 நபர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஐஓசிஎல் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். சாவந்த், RuTAG-IIT மெட்ராஸ் பொறுப்பாளர், பேராசிரியர் அபிஜித் தேஷ்பாண்டே, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) திட்ட அலுவலர் பி. மல்லிகா, சமூக மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் (கன்னியாகுமரி) டாக்டர் பகவதீஸ்வரன் மற்றும் பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாலலட்சுமி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கடந்த 11ஆம் (ஆகஸ்ட் 2021) தேதியன்று இந்த மையம் தொடங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : உள்ளங்கையில் கீழடி - மெட்ராஸ் ஐஐடி!