பாலாறு ஆற்றின் உபரிநீரைச் சேமிக்க தடுப்பணை கட்டமைப்பதற்கான வடிவமைப்பை (Design) மெட்ராஸ் ஐஐடி உருவாக்கியது. சாதாரணமாக தடுப்பணை கட்டுவதற்கு 82 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், ஐஐடி உருவாக்கிய இத்திட்டத்தின் மூலம் 32.5 கோடி ரூபாயுடன் தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உபரிநீரை மட்டுமல்லாமல், 49.5 கோடி ரூபாயையும் சேமிக்கலாம். இந்தத் தடுப்பணை கட்டுவதற்கான நிதியை கல்பாக்கம் அணுமின் நிலையம் வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தடுப்பணை கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப்பட்டு பருவமழை தொடங்குவதற்கு முன் ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவுபெற்றன.
இது தொடர்பாக ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர் சுந்தரவடிவேலு கூறுகையில், “தனித்துவமான முறையில் உருவாக்கப்பட்ட சுவர் மூலம் (DIaphragm wall) தடுப்பணை வெற்றிகரமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடல்நீர் ஊடுருவல் தடுக்கப்பட்டு, நீரின் தன்மை பாதுகாக்கப்படும்” என்று கூறினார்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகப் பாலாறு ஆறு உள்ளது. சமீபகாலமாக, நிகழும் பருவநிலை மாற்றத்தினால் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டு, மேற்கூறிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் தடுப்பணை கட்ட ஐஐடி பேராசிரியர் சுந்தரவடிவேலுவை அணுகியுள்ளது.
அதனடிப்படையில், குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும்வகையிலும் கடல்நீர் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது (வயலூரில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது). மேலும், மழைநீரைச் சேமிப்பதற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாலாறு ஓடினாலும், அதன் 80 விழுக்காடு பகுதி தமிழ்நாட்டில்தான் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஒரு டிஎம்சி நீர் பாதுகாக்கப்படும். மேலும் நிலத்தடி நீரைப் பெருக்கவும் செய்கிறது.
சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு குறைந்து காணப்படுகிறது. இப்பருவ மழை மாற்றத்தால் ஆண்டுக்கு 1200 மி.மீ. அளவு இருந்த மழைப்பொழிவு 650 மி.மீ. அளவுக்கு குறைந்தது. இதனால் சென்னை, வேலூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனைத் தீர்க்கும் வகையிலேயே வயலூரில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மூன்று தலைநகரங்களைக் கோரும் தீர்மானம் - கூடும் ஆந்திர சட்டப்பேரவை!