ரோபோடிக் துறையிலுள்ள வளர்ச்சியை மனதில் கொண்டு ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்கள் ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் ரோபோடிக் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான ஆய்வுக்கூடம் மேம்படுத்தப்படவுள்ளது. இந்தியாவில் ரோபோடிக் துறையின் வளர்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றத்தை மனதில் கொண்டு ஆய்வுக்கூடம் அமையவுள்ளது. இதன்மூலம் அதிக அளவிலான மாணவர்களை இந்தத் துறைக்குள் ஈர்க்க முடியும் என ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஜினியரிங் டிசைன் துறைத் தலைவர் பேராசிரியர் அசோகன், இந்த நன்கொடையை அளித்த முன்னாள் மாணவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். ஆய்வுக்கூடம் அமைப்பதன் மூலம் ரோபோடிக்ஸ் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மேம்படும். அதிகமான மாணவர்கள் இந்தத் துறையை தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவித்தார்.
ரோபோடிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்காக திட்டமிடப்பட்டவை பின்வருமாறு:
நீருக்குள் செயல்படும் ரோபோக்கள், வான்வழி ரோபோக்கள், மருத்துவத்துறை சார்ந்து இயங்கும் ரோபோக்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுகுறித்து சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர்களின் தொடர்பாளர் பேராசிரியர். மகேஷ் பஞ்சக்னுலா, முன்னாள் மாணவர்கள் பல வகைகளிலும் ஐஐடி மெட்ராஸின் முன்னேற்றத்துக்காக உதவுகின்றனர். தற்போது அமையவுள்ள ஆய்வுக்கூடமானது தலைமுறை கடந்தும் பல மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் என தெரிவித்தார்.