நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போதுவரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கரோனா அச்சத்தால், மாணவர்கள் பலர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமலும் உள்ளனர். அவர்களுக்கு மறுவாய்ப்பாக தமிழ்நாட்டில், வரும் 27ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், கல்லூரிகள் பல மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விநியோகித்துவருகின்றன.
இந்நிலையில், ஐஐடிக்களில் மாணவர்கள் சேர்வதற்கான சில தளர்வுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ”ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதல் 20 மதிப்பெண்களை எடுக்கவேண்டும். அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 75 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே, 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் ஐஐடி சேர்க்கைக்கு அவசியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.