சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி-யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்குக்கான மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி. செல்வராஜ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான மூன்று வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஒரு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், மற்றொரு வழக்கை சிவகாஞ்சி காவல் நிலைய விசாரணைக்கு மாற்றியும், மேலும் ஒரு வழக்கில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை இரு நீதிபதிகள் கண்காணித்து வருவதால், அதனுடன் தொடர்புடைய வழக்குகளில் தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப் படுவதாலும், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளாலும் குழப்பம் ஏற்படுவதால், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இதே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமெனவும், அதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள் அந்த கூடுதல் மனுவை வெள்ளிக்கிழமை (ஜூலை 29) அன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி