ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநர் ஐ.ஜி முருகன் மீது பெண் காவல் கண்காணிப்பாளர் பாலியல் புகார் தெரிவித்தார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் காவல் கண்காணிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், பாலியல் புகாரை விசாரிக்கும் உள்பிரிவு குழுவிடம் மீண்டும் புகார் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை கட்டாயம் நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி முருகன், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதேபோல பெண் காவல் கண்காணிப்பாளர் தரப்பில் ஐ.ஜி முருகன் மீதான வழக்கை வேறு மாநிலத்திக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, கார்த்திகேயன் அமர்வு, வழக்கை கேரளா அல்லது டெல்லிக்கு மாற்ற தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ததுடன் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த வாரம் உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு பதில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, மூத்த ஐஏஎஸ் அலுவலர்கள் கொண்ட குழு விசாரணைக்கு உத்தரவிடலாம் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
![தெலுங்கானா காவல்துறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4267362_th.png)
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.ஜி முருகன் வழக்கை தெலங்கானா மாநில காவல்துறைக்கு மாற்றம் செய்தனர். மேலும் சிறப்பு குழுவை ஏற்படுத்தி ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தெலுங்கானா காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.