இது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது, “தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி வரும் 15ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
மாணவர்கள் யாரும் தேர்வினை எழுதுவதில் பாதிப்படையக்கூடாது என அரசு கருதுகிறது. எனவே, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பருவத் தேர்வு நடத்துவதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுதும் முறையிலேயே இறுதியாண்டு பருவத் தேர்வுகள் நடைபெறும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் எழுதுவதற்கும் அனுமதி அளிக்கப்படும்.
கரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் உள்ள கட்டடங்களில் தேர்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம். மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தேவைப்பட்டால் பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் தகுந்த இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். இறுதிப் பருவத் தேர்விற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.