சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு போக்குவரத்து காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களை போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பிரீத் அனலைசர் கருவி மூலமாக குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 15 மாதங்களில் 37 ஆயிரத்து 901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 80 சதவீதம் அபராதத்தொகை பெறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக கடந்த 2022ஆம் ஆண்டு 13 சதவீதம் விபத்துகள் குறைந்து இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்று மாதங்களில் 8% விபத்துகள் குறைந்துள்ளது’’ எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வாகன ஓட்டி ஒருவர் குடிக்காமல் பிரீத் அனலைசர் கருவியில் 45 சதவீதம் குடிபோதையில் இருப்பது போல காண்பித்து, பின்னர் வேறு மெஷின் மூலமாக சோதனையிட்ட போது 0 சதவீதம் குடிபோதையில் இருந்ததாக வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு விளக்கம் அளித்த கூடுதல் ஆணையர், ஒரு முறை நடந்த பிரச்னையால் போலீசார் மீதும், மற்ற கருவிகள் மீதும் குற்றம் சுமத்த தேவையில்லை எனவும், அதே கருவி மூலமாக சிறிது நேரம் கழித்து சோதனையிட்ட போது 0% என காண்பித்ததாகவும் பின்னர் அவர் மீது வழக்குபதிவு செய்யாமல் அனுப்பிவிட்டதாக அவர் கூறினார்.
சென்னை போக்குவரத்து காவல்துறையில் 383 பிரீத் அனலைசர் மிஷின்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு பிரீத் அனலைசர் கருவி மூலமாக சோதனை செய்து 150 முதல் 200 வழக்குப் பதிவு செய்கிறோம். இது போன்ற பிரச்சனை இதுவரை நடந்ததில்லை என அவர் கூறினார்.
இனி வரும் காலங்களில் பிரீத் அனலைசர் மிஷின் பயன்படுத்துவதற்கு முன்னதாக 3 முறை சோதனையிட்ட பிறகே பயன்படுத்த உள்ளதாகவும், அவ்வாறு குடிக்கவில்லை என வாகன ஓட்டி முறையிட்டால், மூன்று முறைக்கு மேல் சோதனை செய்த பிறகே வழக்குப்பதிவு செய்வோம் என அவர் கூறினார். மேலும் காரில் பயணிக்கும்போது வாகன ஓட்டி குடிக்காமல் அருகில் பயணம் செய்வோர் குடித்திருந்தாலும் பிரீத் அனலைசர் கருவியில் வாகன ஓட்டி குடித்தது போல காண்பிக்கும் எனவும், அதே போல இச்சம்பவமும் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
ராயப்பேட்டையில் குடிபோதையில் சென்று போக்குவரத்து காவலர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் 27 லட்சம் லஞ்சம் வாங்கியதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த விவகாரத்தில் போக்குவரத்து பணியின்போது லஞ்சம் வாங்கியதாக 3 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, விபத்தை ஏற்படுத்திய 2 பேரை கைது செய்துள்ளதாக அவர் கூறினார். மேலும் இவ்வழக்கில் 3 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், 1.5 லட்சம் நிவாரணம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என கூறினார்.
இதையும் படிங்க: மதுபோதையில் அநாகரிகமாக புகைப்பிடித்து போலீசார் முகத்திற்கு நேராக ஊதிய நபரிடம் விசாரணை!