தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து பழைமையான சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்றதாக சுபாஷ் சந்திர கபூர் என்பவரின் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.
ஜெர்மனியில் இருந்த சுபாஷ் சந்திர கபூர் 2011ஆம் ஆண்டு கைது செய்யபட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுவந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
சென்னையிலுள்ள மருத்துவமனையில் இருக்கும் வசதிகள் திருச்சியில் இல்லை என்பதால், தனது சொந்த செலவில் இதய நோய்க்கு சென்னையிலுள்ள அப்பலோ அல்லது பிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வு மனு குறித்து அரசின் கருத்தை அறிந்துகொண்டு விரைவில் கருத்து தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்துள்ளது.