சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், " ஏழு பேர் விடுதலை, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தேன்.
மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரை சந்திக்கும் போது அதை வலியுறுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தோம்.
மேலும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, மகாவீர் ஜெயந்தி ஆகியவைகளுக்கு பொது விடுமுறை அளிப்பது போல தமிழ் கடவுள் முருகனுக்கு கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவிற்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும். தஞ்சை நிலத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
விஜய்யை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு படத்திற்கு 126 கோடி வாங்கும் நடிகர் வீட்டிற்கு ஏன் வருமான வரித்துறை செல்லவில்லை்? குடமுழுக்கு உள்ளிட்ட எந்தப் போராட்டங்களுக்கும் குரல் கொடுக்காத அவர் (ரஜினி) இப்போது இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் குரல் கொடுப்பேன் என்று கூறுவதன் உள்நோக்கம் என்ன ?
நடிகர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு உள்ளது. எனவே மத்திய அரசு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக அவர் இருந்துவிடக்கூடாது என்பதால் விஜய்யை அச்சப்பட வைக்க வேண்டும் என்பதாலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, என்றார்.
இதையும் படிங்க : ஜம்மு முன்னாள் முதலமைச்சர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு!