சென்னை: இன்று (மே16) சென்னை பல்கலைக்கழகத்தின் 164ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், “பிரதமர் மோடி கூறியது போல், உலகின் தொன்மையான மொழி தமிழ்தான். தமிழ் மொழியில் இலக்கணமும், இலக்கியமும் மிகவும் பழைமையானது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். தமிழ் மிக பழமையும் தொன்மையும் வாய்ந்த மொழியாக இருக்கிறது. இதனைப் பிற மாநிலங்களிலும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பிற மாநிலங்களில் தமிழை 3ஆவது மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்வேன். தமிழர்களின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் அண்மையில் மயிலாடும்பாறையில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த 4500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்து அதனை தமிழர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தியிருப்பது பெருமை மிகுந்த ஒன்று.
கல்வி, தொழில்துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறது. நாட்டில் மற்ற மாநிலங்களில் உள்ள பல்துறை வாய்ப்புகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிக வாய்ப்புகள் உள்ளன’ எனப் பேசினார்.
இதையும் படிங்க: மெரினாவில் நினைவு சின்னம் எழுப்ப அரசாணை வெளியிட வேண்டும் - மே 17 இயக்கம் கோரிக்கை