சென்னை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஓம்முருகன்( 41). இவர், வர்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும் தமிழரசி (37) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்தத் தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழரசிக்கும், முருகனுக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. தமிழரசி தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் அருகில் உள்ள சாஸ்திரி நகரில் வாழ்ந்து வந்தார்.
தமிழரசி புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவில் சொந்தமாக 3 மாதத்திற்கு முன்பு ஒரு கடையை தொடங்கினார்.
ஏற்கெனவே, செல்போன் கடையில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் ஒரு உதவியாளருடன் கடையை நடந்திவந்துள்ளார்.
இன்று காலை மனைவியின் கடைக்குச் சென்று சேர்ந்து வாழலாம் என ஓம்முருகன் கூறியுள்ளார். ஆனால், தமிழரசி மறுக்கவே, வெள்ளைத் தாளில் 'நாம் பிரியலாம்' என கையெழுத்திட்டுக் கொடு என முருகன் கூறியுள்ளார்.
ஆனால், தமிழரசி அதற்கும் மறுக்கவே ஓம்முருகன் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த திராவகத்தை தமிழரசி முகத்தில் ஊற்றிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனால் தமிழரசி முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் அமிலம் என்பதால் மிகப் பெரிய காயம் ஏற்படவில்லை. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் உடனே அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் உதவி ஆணையர் முகமது நசீர், ஆய்வாளர் சிதம்பரபாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்