சென்னை: பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர், சின்னையா(52) மற்றும் நாகம்மாள்(48) தம்பதி. சின்னையா அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜூலை 31) காலை 5 மணியளவில் திருமுடிவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி இருவரும் சென்று உள்ளனர்.
அப்போது இருவரும் அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் கும்பலாக நின்று கொண்டிருந்த மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். இதில் நாகம்மாள் சாலையின் வலது புறத்தில் விழுந்து உள்ளார். அந்த நேரம் அங்கு எதிர்புறமாக இருந்து வந்த தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக நாகம்மாள் தலையின் மீது ஏறி இறங்கியது.
இதில் நாகம்மாள் தலை துண்டிக்கப்பட்டு லாரியின் டயரில் சிக்கிக் கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன் முன் மனைவி நாகம்மாள் உயிரிழந்தார். லாரியை இயக்கி வந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். லாரி மோதி, மனைவி தலை துண்டாகி இறந்ததைப் பார்த்த கணவர், மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழும் காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி கருக்கலைப்பு விவகாரத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் - பெண் இன்ஸ்பெக்டர் கைது!
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் சாலையில் இருக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கி அடிக்கடி உயிர்கள் பறி போவது தொடர்ச்சியாகவே நடைபெற்று வருவதாக அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி வாகன ஓட்டிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சாலையில் கும்பலாக நின்று கொண்டு இருந்த மாட்டின் மீது சக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன் கண்முன்னே மனைவியின் தலை துண்டித்த சம்பவம் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோபியில் இரண்டு அரசுப் பேருந்துகள் ஜப்தி.. சாலை விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் நீதிமன்றம் நடவடிக்கை!