சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி வழங்கும் மையம், குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ”சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்போசிஸ் நிறுவனம் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையின்போது 17 ஆயிரத்து 940 ஆக்சிஜன் கான்சிடேட்டர் கருவிகளும், ஆக்சிஜன் ஜெனரேட்டர்களும் நிறுவப்பட்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு ஆக்சிஜன் தேவையான அளவிற்கு உள்ளது. இதனால் ஆக்சிஜன் குறித்த பயம் எதிர்காலத்தில் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரமும் தடுப்பூசி
24 மணிநேரமும் தடுப்பூசி போடும் மையத்தை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கிவைத்தோம். அதனைத் தொடர்ந்து இன்று 55 மருத்துவமனை வளாகங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தனக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரமில்லை என கூறுபவர்களும் தனது பணியை முடித்துவிட்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்ற மருத்துவரின் கருத்தை ஏற்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அதிநவீன தீவிர குழந்தைகள் சிறப்பு வார்டு 15 படுக்கையுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையை காட்டிலும் இந்த மருத்துவமனையில் இவ்வாறு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் திட்டம்
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசி கிடைக்கவில்லை என்ற ஒரு நிலை உள்ளது. சுமார் 4 லட்சம் பேருக்கு இந்தத் தடுப்பூசி போட வேண்டிய நிலை இருக்கிறது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5 லட்சம் கோடி தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை சிஎஸ்ஆர் திட்டத்தின் மூலம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வாரம் அந்தத் தடுப்பூசி போடும் திட்டம் அமல்படுத்தப்படும்.
பணி நீக்கம் இல்லை
கரோனா காலத்தில் பணியில் சேர்ந்தவர்களை டிசம்பர் மாதம் வரை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். அதனுடைய தகவல் சரியாக கிடைக்காமல் சில மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் பணியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
அவர்களும் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களை இன்று மதியம் சந்தித்து பேச உள்ளோம். மேலும் கரோனா காலத்தில் அவர்கள் செய்த பணியினை கருத்தில் கொண்டு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டில்தான் காலி பணியிடங்களைவிட 30 ஆயிரம் இடங்களில் கூடுதலாக பணிபுரிந்து வருகின்றனர்” என்றார்.
இதனையடுத்து, முதுகலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் 100% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளோம் என்ற நிலையை அடைவோம்” என பதிலளித்தார்.