சென்னை: கொடுங்கையூர் காவல் துறையினர் எம்.ஆர். நகர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம், முககவசம் அணியாததால் அபராதம் விதித்த போது, அத்தொகையை செலுத்த மறுத்ததுடன் காவலர் உத்தரகுமார் என்பவரின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தன்னை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், மேலும் முகக்கவசம் அணிந்து வந்த தன்னை முககவசம் அணியவில்லை எனக் கூறி அபராதம் கேட்டதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த வடக்கு மண்டல இணை ஆணையர், சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய காவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி காவலர் ஏட்டு பூமிநாதன் மற்றும் காவலர் உத்தரகுமார் ஆகிய இருவரும் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், இதுதொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளது.