சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்விற்குக் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கடவுளை வணங்கி உள்ளே சென்றனர். மாணவர்களுக்குப் பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களைக் கூறி அனுப்பி வைத்தனர்.
இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், சமஸ்கிருதம், பிரெஞ்சு, உருது, தெலுங்கு உள்ளிட்ட எட்டு மொழிகளில் மாணவர்கள் தேர்வினை எழுதி வருகின்றனர். தமிழ் மொழியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வினை எழுதுகின்றனர்.
பொதுத் தேர்வு பணிகளைக் கல்வித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் தேர்வு எந்த வித சலசலப்பு இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வினை எழுதி வருகின்றனர். ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செய்திருந்தனர்.
மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், சென்னை எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரைப்பட நடிகர் தாமு மாணவிகளிடையே தேர்வினை அச்சமின்றி எழுதுவதற்கு வாழ்த்துக்களைக் கூறி அனுப்பி வைத்தார். மேலும் தெரியாத வினாக்களைக் கண்டு கவலைப்படாமல், தெரிந்த வினாக்களுக்கான விடைகளைத் தைரியமாக எழுத அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி கூறியதாவது, பள்ளியில் மாணவர்கள் தேர்வினை எழுதுவதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் மாணவர்கள் தேர்வினை அச்சம் இன்றி எதிர் கொள்வார்கள் என்றும் கூறினார்.
தேர்வு குறித்து பள்ளி மாணவி கூறுகையில், பொழுது பொதுத்தேர்விற்குத் தயாராக உள்ளதாகவும், அதனை எந்த வித அச்சமும் இன்றி எழுத உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: HSC Exam: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்!