சென்னை: திருக்கோயில்களின் திருப்பணிகள், புதிய குளங்கள் உருவாக்குதல், பழைய திருத்தேர் சீரமைத்தல், புதிய திருத்தேர் உருவாக்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் தலமரக்கன்றுகளை நடுதல், புதிய நந்தவனங்களை உருவாக்குதல், கோசாலைகளை முறையாக பராமரித்தல், யானைகளுக்கு 15 நாளுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்தல், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் இடங்களை மீட்டல், மீட்கப்பட்ட நிலங்களை பாதுகாத்தல், கணினி வழி ரசீது முறையை நடைமுறைப்படுத்துதல், புதிய பள்ளி, கல்லூரிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டில், திருக்கோயில் பட்டியலில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் புராதானமிக்க திருக்கோயில்கள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் 270 திருக்கோயில்கள் 9 முதல் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இவற்றில் 174 திருக்கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. 96 திருக்கோயில்கள் திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்ற விவரம் இத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பின்பு 5 ஆண்டு காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை.
விவரங்கள் வழங்க அறிவுறுத்தல்
இந்த புதிய அரசு அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக தமிழ்நாட்டில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையும் புராதானமிக்க திருக்கோயில்களின் விவரங்களை பெறுவதற்கு அந்ததந்த மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திருக்கோயிலின் பெயர், நூற்றாண்டு விவரம், குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற விவரம், திருக்கோயிலின் தற்போதைய நிலை ஆகியவை குறித்த விவரம் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 ஆண்டுகள் ஆகியும் குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள திருக்கோயில்களை கண்டறிந்து திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருமத்தம்பட்டி நகராட்சி துணை தலைவர் பதவியை காங்கிரஸ்க்கு வழங்கிய திமுக